Sunday, August 5, 2012

நொப்பிசன்

பாஸை கையில வாங்கி செக் பண்ணி கொண்டன். பேஷன்ட் நேம், சரி, எஸ்.ஐ.சி.யூ.
ஒ. கே.
மார்னிங் 9.30 - 10 .30 ஈவ்னிங் 3 .30 - 4 .30,பழைய செடுளை வெட்டி 10.30 -11 .30 , 4 .30 -5 .30.

ஒரு துண்டு பேபரில டயிப் பண்ணி பாதி கிளிஞ்ச லமனேட்டோட..

இந்த பாஸை எடுக்க அரை மணித்தியாலம் வெயிட் பண்ணோணும்.. ஆனா இந்த பாஸ் இருந்தா தான் அந்த வீரப்பன் அண்ண உள்ள விடுவார்..

அந்த செக்குரிட்டிய முதல்ல பாத்து திகைச்சு போனன். சுட்டுட்டாங்கள் என்டுச்சினம், இங்க செக்குரிட்டி வேலை செய்யிறீங்கள். உங்க பேர் வீரப்பன் தானே , டிவியில எல்லாம் பாத்திருக்கிறன்.

கேக்கேல.

எந்த நேரமும் மூஞ்ச்சிய விரப்பாவே வச்சிருக்கும். நில்லு ஒரு நாளைக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்காட்டி...

கவர்னரே வந்தாலும் அவருட்ட பாஸ் காட்டிட்டு தான் போகனும்..அப்பிடி ஒரு ஸ்ட்ரிட்டு..

கொஞ்ச நாளாவே இங்கயே இருக்கிறதால வீரப்பன் அண்ண நல்ல பழக்கம்.
எனக்கு பாஸே தேவையில்ல. ஆனா நான் காட்டாம போனதில்ல.

காலமை செடுல் முடின்ச்சா ஈவ்னிங்குக்காக ரிசப்சனுக்கு பக்கத்தில வெயிட் பண்ணோணும்.. "ப" வடிவில மூணு ,திரீ இன் எ ரோ காங் சேயார் போட்டிருக்கும்.

பெசன்ட்ட பாக்கிற நேரம் போக மிச்ச நேரம் எல்லாம் அதில யார் உக்காரிறது எண்டு போட்டி..பின்ன நாள் முழுக்க கால் கடுக்க நினுட்டுரிந்தா நம்மள பாக்கிறதுக்கு கொஞ்ச நாளில யாரவது பாஸ் வாங்கோணும்.

உட்கார்ற மாட்டர் எங்களோடையே ஊறிபோனது.

காலமை எட்டு மணிக்கு ஒப்பிசுக்கு போனா சீட்டில எட்டு மணித்தியாலம் உட்கார்ந்தே வேலை பாக்கிறம். சரி சரி .. உட்கார்ந்திருக்கிரம்.

பிறகு பஸ்சில நல்லா உட்கார கூடிய சீட்டா பாத்தி ஏறி உட்காந்து கொள்ரம்,

அதுக்கு பிறகு வீட்ட போய் டிவிக்கு முன்னால உட்காருரம். உட்கார்ந்து யோசிச்சு பாத்தா ஒரு நாளைக்கு நாங்க படுக்கிறத விட உட்காருர நேரம் கூட..

தமிழ் நாட்டில சீட்டுக்கு போட்டி எண்டா சொல்லவா வேணும். நம்ம நாட்டில மாதிரி வெத்திலைய போட்டுக்கொண்டு ஒரே கதிரேல ஒய்யாரமா காலத்துக்கும் உட்காரமுடியாது. அவ்வளவு போட்டி.

அண்டைக்கு அவ்வளவு இல்லை.

அம்பாந்தோட்டை மாதிரி சொல்லி வச்சு சீட் எடுத்தன்.

இனி பின்னேரம் வரைக்கும் முகட்டை பாக்கிறது.பக்கத்தில ஏதாவது பிகருங்க வந்தா பாகிறது.வேணும்னா சுத்தி முத்தி பிராக்கு பாக்கலாம்.அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்கா ஏதாவது சுவாரசியமா நடந்திட்டே இருக்கும். எனக்கு பழகி போச்சு. பாக்கேல.

யாராச்சும் வாழ்க்கைய வெறுத்து பாப்பம் எண்டு ஆசை பட்டா ரெண்டு மாசம் ஒரு ஹோஸ்பிடல்ல போய் தங்கி பாருங்க. வெறுக்கும்.

இதே இடத்திலையே உட்கார்ந்திருக்கொனும். தூங்காமையும் இருக்கோணும்.

ரெண்டு ரீசன்,

பேஷன்ட் முளிச்சிட்டாங்க நீங்க போய் பாக்கலாம்.

ரெண்டு ,

நான் ரிசப்சன்ல வாய பிளந்து கொண்டு தூங்கி , வீணீர், கீணிர் வடிக்க எவனாவது அதை பற்றி ப்ளாக் எழுதிடுவானோ எண்டு பயம்..

இப்பிடியான நேரங்களில பக்கத்தில வயசான கிழவன்கள் தனிய உட்கார்ந்திருந்தா ஒரு ஆறுதல். சிம்பு தனுஸ் பிரண்ட்ஷிப். கௌசல்யா நித்தியானதா ஆச்சிரம விசிட் எண்டு ஹாட்டா பேசாட்டிலும் , ராஜீவ் காந்திய ஏன் போட்டாங்க, காந்திய ஏன் சுட்டாங்க வரைக்கும் ஆறிப்போன விசயங்கள பக்கத்தில இருந்து பாத்தவங்க மாதிரி காதுகடிப்பாங்க. வழமையா சுச்சு வருது வயிறு கிளறுது எண்டு ஏதாவது சொல்லீட்டு எஸ் ஆகிறது.

சார் தமிழுங்களா. ஐ யாம் மது,புறம் சிறிலங்கா பேச்ச ஆரம்பிப்பமா..

பக்கத்தில ஒரு நடுத்தர வயசு சொட்டை. கிழவன் எண்டு சொல்ற அளவுக்கு அதுக்கு வயசில்ல. அங்கிள் எண்டு சொல்ல எனக்கு மனசில்ல.

ஒரு எறும்பு இன்னொரு எறும்புக்கு லிப் டு லிப் குடுத்துக்கொண்டு இருந்திச்சு. இந்த சொட்டை அதை விரச்சு பாத்துக்கொண்டு இருக்குது,

கொஞ்ச நேரத்தில பாத்தன் . எறும்பு இல்லை..அதே பார்வை.

இவரும் ஹஸ்பிடலில ரெண்டு மாசம் இருந்திட்டார் போல.. அது தான் வெறுத்து போய் உட்கார்ந்திருக்கார். ஆனா முன்ன பின்ன பாத்தது இல்லை.

குரலை இருமி பாத்தன். காலை முன்னுக்கு பின்னுக்கு அசச்சு பாத்தன். கைய மேல தூக்கி ஸ்ட்ரெச்சிங் பண்ணி பாத்தன்..பாக்கேல. கொஞ்ச நேரம் விட்டுட்டன்.

யோவ் சொட்டை ஏதாவது பேசுடா. தூக்கம் தூக்கமா வருது.

நாங்கெல்லாம் அந்த காலத்தில எண்டு ஆரம்பிச்சு வாழ்கையிண்ட தத்துவத்தை சொல்லுவீங்களே இப்ப ஏதாவது சொல்லுயா யோவ்.

எனக்கு சுச்சு வராது , வயிறு கிளராது..கத்தோணும் மாதிரி இருந்திச்சு. கத்தேல..

கொயாள ஏதாவது ரேச்போன்ஸ் இருக்கா பாரு .. ஒரு வேளை பூட்ட கேசா, லேசா அசைவு இருக்கே. இளவு சவாரியா எனக்கெண்டே வந்து வாய்க்குதுங்க பாரு. சென்னை ஆட்டோ காரங்க கத்துக்குடுத்தது.

அந்த சொட்டைய பாத்தாலே எனக்கு தூக்கம் தூக்கமா வருது. தூங்கேல.

மூணு மணி போல வெளில போயிட்டு மத்தியானம் சாப்பிட்டு அங்க இங்க சுத்தீட்டு நாலரைக்கு ஈவ்னிங் செடுளுக்கு வந்தன். சொட்ட அசையாம இருந்திச்சு. ஈவ்னிங் செடுல் பிறகு உட்காருறது எண்டு ஏழெட்டு மணி வரைக்கும் போச்சு.

இரவு சாப்பாட்டுக்கு பிறகு விசிட்டர் ரூமில போய் படுத்துக்கலாம். நல்லா மல்லாக்கா சாய்க்க கூடிய கதிரை.. பான் லயிட் எண்டு வசதியா இருக்கும், ஆம்பிளைகளுக்கு அந்த இடம். அதே இடதிண்ட முடிவில ஒரு கதவு இருக்கு அதுக்கங்கால பொம்பிளைகள். வெளில போக வாசல் ஒன்னு தான்.

காலமையே பாத்தன். "எங்கேயும் எப்போதும்" அனன்யா மாதிரி ஒரு பிகர். எறும்பு கடிச்சு தடிச்ச மாதிரி கீழ் உதடு. எறும்பு மட்டும் கடிச்சிருந்தா அந்த எறும்..பை..

சின்ன தோடு சின்ன மூக்கு அதில மூக்குத்தி. இப்பெல்லாம் ஜீன்சும் டீசெர்ட்டும் வசதி என்றதாலையும் தலை முடி ஸ்ட்ரஇட் பண்ணி போனி டெயில் போடுரதாலையும் மூக்குத்தி கலாச்சாரம் குரஞ்ச்சிட்டு. பொட்டும் தான். தீக்குச்சிண்ட பின்புறத்தால வச்சிருக்கோணும். அவளவு சின்னது. ஸ்டிக்கர் இல்லை. பாத்துக்கொண்டே இருக்கலாம். சான்ஸ் கிடைக்கேல.

எண்டாலும் மனசுக்குள்ள ஒரு ஆசை. இந்த ரூமில அவள பாக்க மாட்டமா. மனசு தான் கேட்டுச்சு. கண்ணிரண்டும் கேக்கேலை. காலமேல இருந்து உட்கார்ந்து டஎர்ட்.. இப்ப தூங்கோனும். தூக்கம் தும்மல மாதிரி டக்கெண்டு வந்திட்டுது. எனக்கெண்டு வசதியா ஒரு சீட்ட பாத்து உட்கார்ந்து கொண்டன்.

சில செக்கனுக்குள்லையே நரை முடி பக்கத்தில. தொலன்ச்சாடா மது, தூக்கம் வருது , இப்ப வாய குடுத்து மாட்டீடாத. பெரிசு என்ன கதைச்சாலும், பிதாமகன் விக்கிரம் மாதிரி ரியாக்சன் குடு அது போதும். அடுத்த செக்கனே பேச்சு ஆரம்பிச்சுது, என்ன வசியமோ , நான் பிதாமகன் சூரியா ஆகீட்டன்..

அவ்வளவு விஷயம் கதைச்சம்.

ராஜீவ் காந்திய ஏன் போட்டாங்க, காந்திய ஏன் சுட்டாங்க.

கடைசியா ஈழ தமிழருக்கு கலைஞ்சர்ட ஆதரவ பற்றி தொடங்கிச்சு பெரிசு. அது சூரியன்.

எனக்கு ச்சுச்சு வருது வயிறு கிளறுது.

கடுப்பில கிளம்பீட்டன். தூக்கம் போயிட்டுது.

வெளில ஒரு குட்டி சுவர் இருக்கு. அதில சாஞ்ச்சு நிக்கலாம். காத்து வாங்கலாம். நிண்டன்.. வாங்கினன்.. பக்கத்தில பொட்டு மூக்குத்தி. அனன்யா .. சுடிதார்..

பேச்சு குடுப்பமா, எனக்கு வாய் மட்டும் தான். ஒரு பிகரோட ரொமான்ஸ் ஆ பேசுறதுக்குள்ள சுச்சு வந்த்திடும். அவளுகளா பாத்து பாவம்னு பேசினாத்தான். பேசேல.

கொஞ்ச நேரம் கைய கட்டிக்கொண்டு கீழ பாத்திட்டு நிண்டாள், பிறகு ஒரு கை கட்டியே இருக்க மட்ட கையாள தேச்சுக்கொண்டே. மூக்கை உறிஞ்சினாள். கொஞ்ச நேரம் ஏதோ யோசிச்சிட்டு உள்ள போயிட்டாள், நானும் உள்ள போனன். அந்த கிழவண்ட வேற ஒருத்தன் மாட்டியிருந்தான், நல்லா வேளை. இன்னொரு கதிரையா பாத்து சாஞ்சு கொண்டன், தூக்கம் வரேல, மெடிக்கல் ரிப்போர்ட் ஓட நாலஞ்ச்சு புத்தகங்களை சொருகி வச்சிருந்தன்,

சேட்டன்ட திரீ மிஸ்டேக்.

ஒரு பக்கம் தாண்டி இருக்க மாட்டன். யாரோ என்னையே பாத்திட்டு இருக்கிற மாதிரி இருந்திச்சு, அனன்யாவா இருந்தா.

பாத்தன். அனன்யா தான்.

பாக்கிறாள்..

கொஞ்சம் தயக்கமா..

கிட்ட வாறாள்

என்னட்ட தான்..

அடி வயுத்த கலக்குது.

"எக்ஸ்கியுஸ்மீ, பாத்த உடனேயே விழுந்திட்டன். ஐ லவ் யு "

மனசு எதிர் பாத்திச்சு.

எக்ஸ்கியுஸ் மீ உங்க கிட்ட வேறெதாச்சும் புக் இருக்குமா எனக்கொண்டு தரமுடியுமா?

புருவத்தை உயர்த்தி, கண்ண விரிச்சு தலைய ஆட்டி,

எடுத்து குடுக்க சொல்லி நான் சொல்லவே இல்ல. கை என் பேச்சை கேக்கவே இல்லை..

மார்னிங் ரிட்டர்ன் பண்ணிடுரன் , தலைய அசச்சு தேங்க்ஸ் . உதட்டை நெளிச்சு சிரிப்பு, போயிட்டா..

இனி ரெண்டு நாளைக்கு தூக்கம் வராது.

காலேல எழும்போணும், பாஸ் எடுக்கோணும்,

இப்ப படுத்தா தான் பிறகு உக்காரலாம். புரண்டு பாத்தன் வரேல, குப்புற படுத்தன் வரேல , திரும்பி மற்றபக்கம் படுத்தன்,

சொட்டை விரச்சு பாத்த படி படுத்திருந்திச்சு. எனக்குள்ள லேசா சிரிப்பு.

தூங்கீட்டன்..

திடுக்கிட்டு எழும்பினன், ஒரே இரைச்சல் சத்தம். தலைய இழுத்து வாரிக்கொண்டு பொம்பிளைகள், ஆம்பிளைகள் சரத்தை கட்டிக்கொண்டு வெறு மேலோட தோளில துவாய் , வாயில பிரஷ் உதடு முழுக்க பேஸ்ட்.. இதோட அரட்டை. நல்லா காலம் டூத் பிரஷையும் பேஸ்டையும் கண்டு பிடிச்சவன் இந்த காச்சிய பாகேல. பாவம்யா அந்த பிரஷ். எவ்வளவு நேரம் தான் தேப்பீங்க.

பக்கத்தில சொட்டை இல்லை. அனன்யாவும் இல்லை. புக் எனக்கு பக்கத்திலையே இருந்திச்சு. ஒரு தாங்க்ஸ் கூட சொல்லாம போய்டாளே.

காலமை செடுல் வழமை மாதிரி, இனி உட்காரோனும், சொட்டை உத்கார்ந்திருந்திச்சு. இண்டைக்கு காம்படிசன் கூட, எவனாவது எழும்ப மாட்டானா எண்டு எக்கச்சக்க பேர்.

சொட்டை அசையாது மிச்ச எட்டு சீட் எண்ட டார்கெட். முந்தி அடிச்சு உட்காருறது சரியில்ல. நாங்க எல்லாம் பபிளிக்கில டீசென்ட்டு. ஒரு சீட் பிரீ, பாதி உட்கார்ந்திட்டன், கம்பெடிட்டார் ஒரு அண்டி பக்கத்திலையே நின்னு பாத்திட்டு இருந்திச்சு, மனசு கேக்கேல விட்டு குடுத்திட்டன்.

அவாவோட பக்கத்தில நிண்டது அனன்யா, என்ன தெரின்ச்ச மாதிரியே ஒரு ரியாக்சனும் இல்லை.

நிறைய பேருட்ட புக் வாங்கியிருப்பாள் போல,

நானும் கணக்கேடுக்கேலை, நேற்றைய காதல் நேற்றோட ..நமளுக்கெல்லாம் காதல் கரண்டு பில் மாதிரி மாசா மாசம் எக்கச்சக்கமா வந்திட்டே இருக்கும் , அத எல்லாம் கணக்கெடுத்தா புலைப்ப பாக்க முடியுமாஎன்ன,

கால் கடுக்க தொடங்கீட்டுது, அநியாயத்துக்கு நல்லவன்டா நீ.. காலை மாத்தி மாத்தி ஊன்டிக்கொண்டன். இப்ப பெரிசா காம்பெடிசன் இல்லை , யாரும் எழும்பவுமில்ல, ஒரே காம்பெடிசன் அனன்யா.

எங்களுக்கெல்லாம் காதல விட கால் வலி தான் பெரிசு. அடுத்த சீட் காலி ஆச்சு அவள பாக்க கூட இல்லை , உக்கார்ந்திட்டன், மணி மூணரை ஆகுது, மத்தியானம் சாப்பிடவும் இல்லை.சீட்டு போயிடுமே.


சொட்டைய பாத்தன்.. தூக்கம் வருது.. அசைவே இல்லை.

திடீரெண்டு எறும்பு கடிச்ச மாதிரி திடுக்கிட்டு எழும்பிச்சு. மணிக்கூட்டை பாத்திட்டு, நடக்க தொடன்கீச்சு, பேஷண்ட பாக்க தான் போகுது, ஆனா இப்ப பாக்க முடியாதே, கையில பாஸும் இல்லை, வீரப்பனை தாண்டி போகவும் முடியாது. எக்கச்சக்க குழப்பம்.. பாஸை காட்டுற மாதிரி வெறும் கைய காட்டிச்சு. வீரப்பனும் ஒன்னும் சொல்லேல, கண் வெட்டாம பாத்திட்டு இருந்தார், குழப்பம் துரியத்துக்கு ஏறீட்டுது, கஷ்டப்பட்டு பிடிச்ச சீட்டை விட்டு எழும்பீட்டன்.

யாரன்ன அவர் , இப்ப பேஷண்ட பாக்க போறார், கசுவலா கதைக்கிற மாதிரி பேச்சுக்குடுத்தன்.

யாரு..நொப்பிசன் சாரை கேக்கிரியாப்பா...

பாவம்பா அந்த ஆளு, நம்ம சீயிப் டாக்டரோட குளோஸ் பிரண்டு தான்.

வயிப்பையும் பிள்ளையையும் ஒரே அக்சிடென்டில குடுத்திட்டாரு. அதுக்கப்புறம் இப்பிடி தான்.

ஆமாப்பா காசு உழைக்கிறன் எண்டு பாதி நாளை குடும்பத்தை பிரின்ச்சு வெளி ஊரிலையே களிச்சிட்டாறு, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு அக்சிடென்டில வயிப்பும் பிள்ளையும் காலி,

அந்தம்மா ஒரு வாரமா கோமாவில இருந்திச்சு, பொண்டாட்டிண்ட குரலை கடைசியா ஒருக்கா கேக்க மாட்டமா எண்டு இங்கயே ராப்பகலா இருந்தாரு, அந்தம்மா கண் முழிக்காமையே போய் சேர்ந்திட்டுது.

எப்பவாவது இப்பிடித்தான் பொண்டாட்டி பிள்ளைட ஜாபகம் வரும் போது இப்பிடி ஆகீடுவாரு.

அந்தம்மா இன்னும் கோமாவில இருக்கிற மாதிரி வந்து பாப்பாரு, நாளைக்கு சரியாகிடும் போயிடுவாரு..

ம்ம்..என்னத்தை உழச்சு என்னத்தை கண்டாரு. கடைசியா பொண்டாட்டி பிள்ளைங்களோட இருக்க குடுத்து வக்கேல..

யாரும் கேக்க மாட்டாங்களா எண்டு பாத்துக்கொண்டு இருந்த மாதிரி மனசில இருந்த பாரத்தை அப்பிடியே இறக்கி வச்சார், இப்ப எனக்கு பாரமாகீட்டுது. கண் வெட்டாம அந்த சொட்டைய , இல்லை நொப்பிசன் சாரை பாத்திட்டு இருந்தன்,

மனசுக்குள்ள முடிவு பண்ணினன், காசு உழைக்கிறதெண்டு வெளிநாட்டு வாழ்க்கை எனக்கு வேண்டவே வேண்டாம்...

இப்ப நான் லாவோசுக்கு உழைக்க வந்திருக்கிறன் !!!!